மராட்டியத்தில் பட்னாவிஸ் தான் முதல்வர்; சிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- நிதின் கட்காரி

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தலைமையில் மராட்டியத்தில் பாஜக-சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

Update: 2019-11-07 09:13 GMT
மும்பை

மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை  தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

பாஜகவின் மூத்த தலைவரான நிதின்  கட்காரி, நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க உள்ளார். இதற்காக நாக்பூருக்கு  வந்திருந்தார்.  அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோகன் பகவத் அல்லது ஆர்.எஸ்.எஸ்சுக்கு "இதில் எந்தப் பங்கும் இல்லை" , எதுவும் இருக்கக்கூடாது. தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் அவர் தான் அரசை வழிநடத்த வேண்டும். பாரதீய ஜனதா  105 இடங்களை வென்று உள்ளது. எனவே முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

நான் டெல்லி அரசியலில் இருப்பதால், மீண்டும் மாநில அரசுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை. மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மிக விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்