இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது - பிரதமர் மோடி பேச்சு

2025-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை இந்தியா எட்டச் செய்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் பங்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-11-07 23:53 GMT
தர்மசாலா,

இமாசலபிரதேச மாநிலத்துக்கு முதலீடு திரட்டுவதற்காக, அம்மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில், உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:-

முன்பெல்லாம், இந்தியாவில் ஒருசில நகரங்களில் மட்டுமே முதலீட்டாளர் மாநாடு நடைபெறும். ஆனால், இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது.

அந்த அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் திறனுடன் மாநிலங்கள் திகழ்கின்றன. முதலீடுகளை ஈர்க்க ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. இந்த போட்டி, உலக அளவில் நமது தொழில்துறை வளர உதவும்.

2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதில், ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது.

எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 79 இடங்கள் முன்னேறி உள்ளது. தற்போது, முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது.

இமாசலபிரதேசம், முதலீடுகளை ஈர்க்கும் திறனை பெருக்கிக் கொண்டுள்ளது.

தேவையற்ற விதிமுறைகள், அளவுக்கு அதிகமான அரசின் குறுக்கீடுகள் ஆகியவை தொழில் வளர்ச்சியின் வேகத்தை பாதிக்கின்றன. இதை உணர்ந்து, தேவையற்ற நடைமுறைகளை அரசு நீக்கி வருகிறது.

வெறும் ஊக்கத்தொகை அளிப்பது தொழில்துறைக்கோ, முதலீட்டாளர்களுக்கோ நீண்டகால பலன் அளிக்காது என்பதையும் மாநிலங்கள் புரிந்து கொண்டுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்