பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் வாலிபர் பரிதாப சாவு

பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் வாலிபர் பரிதாப உயிரிழந்தார்.

Update: 2019-11-16 19:45 GMT
சண்டிகர்,

பஞ்சாப்பின் சங்ருர் மாவட்டத்துக்கு உட்பட்ட சங்காலிவாலா கிராமத்தை சேர்ந்த தலித் வாலிபர் ஒருவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ரிங்கு உள்ளிட்ட சிலருக்கும் இடையே கடந்த மாதம் 21-ந்தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது கிராமத்தினர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

பின்னர் கடந்த 7-ந்தேதி அந்த வாலிபரை ரிங்கு தனது வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு அவரும், மேலும் 3 பேரும் சேர்ந்து அந்த வாலிபரை ஒரு தூணில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கினர். அப்போது வலி தாங்காத அந்த வாலிபர், அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். இதற்கு மனமிறங்காத அவர்கள், அவரை வலுக்கட்டாயமாக சிறுநீரை குடிக்க வைத்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த தலித் வாலிபர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்