சபரிமலையில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து கேரள மந்திரி ஆலோசனை

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-11-17 21:45 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் கோவிலுக்கு வந்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 10 இளம்பெண்களை பம்பையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று 2-வது நாளாக கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின்னர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சபரிமலையில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆகஸ்டு, செப்டம்பர், நவம்பர் ஆகிய 3 மாதங்கள் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் பக்தர்களுக்கு சிறந்த முறையில் அடிப்படை வசதிகள் செய்து உள்ளோம். அதுபற்றி இப்போதும் ஆலோசிக்கப்பட்டது.

சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய இளம்பெண்கள் வருகிறார்கள் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். தற்போது சபரிமலையில் எந்தவித பதற்றமான சூழ்நிலையும் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நிலக்கல், சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து சிறு சிறு குறைகளை கண்டறிந்து சரிசெய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

நிலக்கல்லில் 11 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டு இருக்கிறது. கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு கண்டக்டருடன் பஸ்கள் இயக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பக்தர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை அறிய கோவில் வளாகத்தில் ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்க அரசு மற்றும் கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் தங்குவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டு இருக்கிறது.

சபரிமலையில் துப்புரவு பணியாளர்கள் 900 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சன்னிதானத்தில் தினமும் 33 ஆயிரத்து 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பம்பை மற்றும் செங்கன்னூரில் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் வாங்கப்பட்டு துணிப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தனி அதிகாரிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கேரள சட்ட மந்திரி ஏ.கே.பாலன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிரான மறுஆய்வு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிப்பதாக கூறவில்லை என்றபோதிலும், நடைமுறையில் தடை இருப்பதாகவே கருதவேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்