வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை '17 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு' சமம் - இஸ்ரோ

வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை '17 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு' சமம் என இஸ்ரோ அறிக்கை கூறுகிறது.

Update: 2019-11-18 08:43 GMT
புதுடெல்லி,

வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை (இஸ்ரோ) சேர்ந்த கே.எம். ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால், ஏ.எஸ். ராஜாவத் ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவின் ஆய்வுக் கட்டுரையை ஜியோபிசிகல் ஜர்னல் இன்டர்நேஷனலில் வெளியிட்டு  உள்ளது.

அதில் வடகொரியாவில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பகுதியில், அணு வெடிப்பு கணிசமான மேற்பரப்பு சிதைவுக்கு காரணமாக அமைந்தது.  தரைப்பரப்பு பெரும் சேதம் அடைந்ததையும், பக்கவாட்டில் உள்ள பகுதிகள் அரை மீட்டர் அளவுக்கு இடம் பெயர்ந்ததையும் ஜப்பானின் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மந்தாப் மவுண்டிற்கு கீழே 542 மீட்டர் ஆழத்தில் வெடிப்பு சோதனை செய்யப்பட்டு உள்ளது என வல்லுநர்கள் கூறி உள்ளனர். 

செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில், வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு 245 முதல் 271 கிலோ டன் வரை சக்தி வாய்ந்தது என இஸ்ரோ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  1945ல் ஹிரோஷிமாவில் பயன்படுத்தப்பட்டது 15 கிலோ டன்  சக்தி வாய்ந்தது. ஜப்பானிய செயற்கைக்கோள் ஏஎல்ஓஎஸ்-2லிருந்து செயற்கை துளை ரேடார் (எஸ்ஏஆர்) தரவை வல்லுநர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்