போராடும் மாணவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது: டெல்லி போலீஸ் வலியுறுத்தல்

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-18 12:59 GMT
புதுடெல்லி,

விடுதி கட்டண உயர்வை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து, விடுதி கட்டணத்தை கணிசமாக குறைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த மாணவர்கள், நிர்வாகத்தின் நடவடிக்கை கண் துடைப்பு எனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர், இன்று துவங்கிய நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மாணவர்கள் முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  மாணவர்கள் போராட்டத்தால் பாராளுமன்ற வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணியாக செல்லும் போது போலீசாருடன் மாணவர்கள் லேசான தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் மாணவர்கள் பிரச்சனை குறித்து பேச அரசு தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்கவே விரும்புவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று மாணவர்களை வலியுறுத்தியுள்ளதாக டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்