சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தில் தனது இரண்டு மகள்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியினர் புகார்

சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தில் தனது இரண்டு மகள்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்டு தருமாறு ஒரு தம்பதியினர் குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2019-11-19 10:21 GMT
அகமதாபாத்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த  ஜனார்த்தனா சர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனது நான்கு மகள்களையும் பெங்களூருவில் சுவாமி நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்து உள்ளனர்.  இந்த ஆண்டு அவர்களது மகள்கள் அகமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள யோகினி சர்வகபீடம் என்ற நித்யானந்தா தயான் பீடத்தின் மற்றொரு கிளைக்கு மாற்றப்பட்டதை அறிந்ததும், அவர்களை சந்திக்க முயன்று உள்ளனர்.  இருப்பினும், நிறுவனத்தின் அதிகாரிகள், அவர்களது மகள்களை சந்திக்க அனுமதிக்க மறுத்து விட்டனர்.

காவல்துறையினரின் உதவியுடன், இந்த நிறுவனத்திற்கு சென்ற ஜனார்த்தனா சர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது இரண்டு மைனர் மகள்களையும் திரும்ப அழைத்து சென்றனர். ஆனால் அவர்களது மூத்த மகள்களான லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோர் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டனர்.

இதை தொடர்ந்து அவர்கள், குஜராத் ஐகோர்ட்டை அணுகி உள்ளனர். தங்களது இரண்டு மூத்த மகள்கள் கடத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக  அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தூக்கத்தை இழந்து உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கும் தங்கள் மகள்களை மீட்டு, காவல்துறையினரும், நிறுவனத்தின் அதிகாரிகளும் நீதிமன்றத்தின் முன் அவர்களை ஆஜராக்க உத்தரவிடுமாறு தம்பதியினர் கூறி உள்ளனர்.

மேலும் இந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள மற்ற சிறார்களிடமும் விசாரணை நடத்துமாறு தம்பதியினர் கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் பெற்றோர் இது குறித்து போலீசில் புகாரும் அளித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்