இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-21 14:13 GMT
புதுடெல்லி,

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தோற்கடித்தார். அவர் கடந்த 18-ந் தேதி புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்ததையொட்டி, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே விலக வேண்டும் என்று மந்திரிகளும், கட்சி நிர்வாகிகளும் அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதையடுத்து, மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.  ரணில் விக்கிரமசிங்கேவின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா- இலங்கை இடையேயான சகோதரத்துவ உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு  அவருடன் பணியாற்றுவதை  எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்