இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதி - இமயமலையில் இருந்து நித்யானந்தா!!

இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி உள்ளனர் என இமயமலையில் இருந்து நித்யானந்தா சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Update: 2019-11-22 07:01 GMT
புதுடெல்லி

ஆமதாபாத்தில் உள்ள தமது ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை சட்டவிரோதமாக பலவந்தப்படுத்தி நித்யானந்தா அடைத்து வைத்திருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பிரானபிரியா, பிரியாத்தவதா ஆகிய இரண்டு பெண் சீடர்களை கைது செய்த போலீசார் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள், பெண்களை மீட்டு, நித்யானந்தாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆமதாபாத் எஸ்.பி. ஆர்.வி.ஆசாரி, நாட்டைவிட்டு தப்பிச் சென்ற நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

ஆர்.வி.அசாரி நிருபர்களிடம் கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இருவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

குஜராத் மாநில உள்துறை மந்திரி பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப விட மாட்டோம் என்றார்.

இந்த நிலையில் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது அனைத்து குரு குலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடம் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது. இதனால் எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும். நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.

இந்தியாவில் நீதியைப் பெற நீண்ட காலமாகும். மேலும் அதிகம் செலவழிக்க வேண்டும். எனது சீடர்களுக்கு கடும் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் துன்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க உலகில் எங்காவது ஒரு மூலையில் காணி நிலம் எனக்கு அளிக்க வேண்டும்.

அந்த இடத்தில் நானும், எனது சீடர்களும் வேத ஆகம ரீதியிலான ஆன்மீக பயிற்சியில் அமைதியாக ஈடுபடுவோம்.

நான் யாருக்கும் எதிரி அல்ல. இந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி உள்ளனர்.

நான் மனித உரிமைகளுக்கும், குழந்தைகள் நல உரிமைகளுக்கும் எதிரானவன் அல்ல. எனது குருகுலத்தில் அகிம்சை வழியிலான பயிற்சிகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. அங்கு எந்தவித துன்புறுத்தல்களும் நிகழவில்லை.

நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். மிகப்பெரிய ஆன்மீக செயலை செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்.

பரமசிவனும், கால பைரவரும், மகா காளியும் அதை விரும்புகிறார்கள். தினசரி காலையில் சத்சங்கம் மூலம் உலகம் முழுவதும் உள்ள எனது சீடர்களை தொடர்பு கொள்கிறேன். அதை தவிர எனது சீடர்களுக்கு நான் எந்தவித தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்குவதில்லை.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்