மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் சரத்பவாரின் மருமகன் அஜித்பவார்: சஞ்சய் ராவத் பேட்டி

மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

Update: 2019-11-23 04:56 GMT
மும்பை:

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந்தேதி வெளியான தேர்தல் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் அக்கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துகொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்துத்வா கொள்கையை கடைப்பிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் ஆட்சி அமைக்க முற்பட்டது. 

இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க  சந்தித்து பேசினார்கள். 

ஆனால் திடீர்  திருப்பமாக  மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.  அவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இது குறித்து மூத்த சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவார் ஆகியோர் தொடர்பில் உள்ளனர், இன்றும் சந்திப்பார்கள், அவர்கள் செய்தியாளர்களுக்கு ஒன்றாக பேட்டி அளிக்க கூடும். ஆனால் உண்மை என்னவென்றால், அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மராட்டியத்தை  அவமதித்துள்ளனர் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்