மத்தியபிரதேச அரசுக்கு புதிய சிக்கல் : காங்கிரசை கதிகலங்க வைத்துள்ள ஜோதிராதித்ய சிந்தியா

டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய தகவலை மாற்றி காங்கிரசை கதிகலங்க வைத்துள்ள ஜோதிராதித்ய சிந்தியாவால் மத்தியபிரதேச அரசுக்கு புதிய சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Update: 2019-11-25 08:07 GMT
போபால்

மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவரது ஆதரவு 20 எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும்  தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்

230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு தற்போது 115  உறுப்பினர்களும், பாஜகவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சமாஜ்வாதி மற்றும்  சுயேட்சைகள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்கும் முன்னரே மாநிலத்தின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். எனினும், சீனியர் என்ற அடிப்படையில் காங்கிரஸ் தலைமை கமல்நாத்தை முதல்வராக்கியது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் குணா தொகுதியில் போட்டியிட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவிடம் தோல்வியடைந்தார். இதனை அடுத்து, கட்சி நடவடிக்கைகளில் இருந்து அவர் சற்றே ஒதுங்கியிருந்தார். மாநில தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய தகவலை சிந்தியா மாற்றியுள்ளார். முன்னாள் எம்.பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் என்று இருந்த நிலையில், தற்போது அது வெறும் பொது ஊழியர், கிரிக்கெட் ஆர்வலர் என்று மாறியுள்ளது.

மேலும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 20 பேரை கட்சி தலைமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மராட்டியத்தில்  கூட்டணி ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் இருந்து வரும் நிலையில், மத்திய பிரதேச காங்கிரசில் தற்போது புதுபிரச்சினை கிளம்பியுள்ளது.

மேலும் செய்திகள்