சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார்

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

Update: 2019-11-25 23:15 GMT
டல்டோன்கஞ்ச்,

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதாவை சேர்ந்த ரகுபர்தாஸ் தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், வருகிற 30-ந் தேதி அங்கு சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

டல்டோன்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தை கொள்ளையடித்தவர்களுக்கும், மாநில மக்களுக்கு சேவை செய்தவர்களுக்கும் இடையே இந்த தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. பா.ஜனதாவின் நிலை ஜார்கண்டின் நீர், வனம், நிலம் ஆகியவற்றை பாதுகாப்பதுதான்.

தற்போதைய பா.ஜனதா அரசு கடந்த 5 ஆண்டுகளாக நிலைத்தன்மை, சிறந்த நிர்வாகம், வளம், கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் பணிபுரிந்தது. கிராமங்களில் சாலைகள் போடப்பட்டுள்ளது, வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சூழ்நிலை கள் மாறியதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளது.

பா.ஜனதா அரசு 5 ஆண்டுகளில் ஊழலை ஒழித்து, வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளது. ஜார்கண்ட் சுரண்டப்படுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளதுடன், வளமாக்குவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள், குற்றவாளிகள் இல்லாத மாநிலமாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அச்சமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

அரசுகள் அமையும்போதெல்லாம் ஊழலை நோக்கமாக கொண்டவர்களால் கொல்லைப்புறம் வழியாக கவிழ்க்கப்பட்டு அரசியல் நிலையற்ற தன்மை நிலவியதாலேயே இங்கு மாவோயிஸ்டுகள் வளர்ந்துள்ளனர். சுயநலம் மிக்க அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களது முழு எண்ணமும் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும், வளங்களை தவறாக பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற சக்திகள் மீண்டும் கைகோர்த்து ஓட்டுக்காக மக்களை திசைதிருப்பி வருகின்றன. இந்த மாநிலத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலிலும் நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்