162 காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா எம்.எல்.ஏக்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாக ஓட்டலில் அணிவகுத்தனர்

162 காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா எம்.எல்.ஏக்கள் பலத்தை நிரூபிக்கும் விதமாக ஓட்டலில் அணிவகுத்தனர், கூட்டணிக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Update: 2019-11-26 05:24 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, அந்த கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந் தேதி அதிகாலையில் ரத்தானது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் ‘கெடு‘ விதித்தார்.

ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்ட சபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ்-சிவசேனா கூட்டணியின் வலிமையை நிரூபிக்கும் விதமாக மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஓட்டலில் தங்களது ஆதரவு 162 எம்.எல்.ஏக்களை கூட்டி, கட்சிகளுக்கு ஆதரவாக இருக்க  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சரத் பவார், உத்தவ் தாக்கரே- சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில், நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன்.  பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன் என எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்