தெலுங்கானாவில் வேலைக்கு திரும்பிய பஸ் தொழிலாளர்கள் கூண்டோடு கைது

தெலுங்கானாவில் வேலைக்கு திரும்பிய பஸ் தொழிலாளர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-11-26 21:38 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் சாலை போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 52 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில், போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று செவ்வாய்க்கிழமை வேலைக்கு திரும்பும்படி, தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு, தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு வேலைக்கு திரும்புவதற்காக டிரைவர்களும், கண்டக்டர்களும் குவிந்தனர். ஆனால், அவர்களை நிர்வாகம் பணிசெய்ய அனுமதிக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர். சில பெண் கண்டக்டர்கள் கதறி அழுதனர். நிஜாமாபாத் பணிமனையில் பெண் கண்டக்டர் ஒருவர் வேலை செய்ய அனுமதிக்குமாறு மேலாளர் காலில் விழுந்து அழுதார். ஆனால் நிர்வாகம் இரங்கவில்லை. பதிலாக வேலைக்கு திரும்பிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை போலீசார் உதவியுடன் கைது செய்து பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “நினைத்தால் போராடுவது நினைத்தால் வேலைக்கு திரும்புவது என்ற மனப்போக்கு கொண்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த அரசு அனுமதி மறுத்து இருக்கிறது. இந்த பிரச்சினையில் தொழிலாளர் நல ஆணையர் முடிவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.

மேலும் செய்திகள்