3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் ; ப.சிதம்பரம் எச்சரிக்கை

3-வது காலாண்டிற்கான ஜி.டி.பி. இன்னும் மோசமடையும் என ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2019-11-30 11:22 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 வருடங்களில் இல்லாத வகையில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது.

மத்திய அரசு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2-வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எட்டு முக்கிய  தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக  குறைந்துள்ளது என நேற்று தெரிவித்து இருந்தது.

இதுபற்றி பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது. ஆனால் அதனை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, முதல் காலாண்டில் 5 சதவீதம் என்ற அளவில் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது வருத்தத்திற்கு உரியது. இது முற்றிலும் ஏற்க இயலாதது. வளர்ச்சியானது 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில்  வெளியிட்டுள்ள செய்தியில், பரவலாக முன்பே கணித்ததன்படி, 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 4.5 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அரசானது அனைத்தும் நன்றாக உள்ளது என இன்னும் கூறி வருகிறது.

மூன்றாவது காலாண்டில் இந்த சரிவு இன்னும் கூடுதலாகும்.  எல்லா வகையிலும் மிக மோசமடையும் என தெரிவித்து உள்ளார்.

ஜார்க்கண்ட் மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து பா.ஜ.க.வின் கொள்கைகள் மற்றும் அரசு நடத்தும் விதம் ஆகியவற்றை புறக்கணிக்கிறோம் என பதிவு செய்ய வேண்டும். அதற்கான முதல் சந்தர்ப்பம் அவர்களுக்கு உள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது சார்பில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்