லாட்டரி மூலம் ரூ.6 கோடி பரிசு பெற்றவருக்கு மேலும் அதிர்ஷ்டம் - மன்னர் கால நாணய புதையல் கிடைத்தது

லாட்டரி மூலம் ரூ.6 கோடி பரிசு பெற்றவருக்கு மேலும் அதிர்ஷ்டமாக, மன்னர் கால நாணய புதையல் கிடைத்துள்ளது.

Update: 2019-12-04 20:42 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினாகரன் (வயது 60). பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலரான இவருக்கு கடந்த ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான ரூ.6 கோடி கிடைத்தது. இந்த பணம் மூலம் ஒரு பழைய வீட்டையும், அதன் அருகே சிறிது நிலத்தையும் விலைக்கு வாங்கினார். சமீபத்தில் அந்த நிலத்தில் விவசாய பணி செய்ய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அவருக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பூமிக்குள் 6 மண் பானைகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது ஏராளமான செப்பு நாணயங்கள் அதில் இருந்தன.

அந்த மண்பானைகளை கைப்பற்றி அதில் இருந்த நாணயங்களை போலீசாரும், அதிகாரிகளும் எண்ணி பார்த்தனர். மொத்தம் 2,600 செப்பு நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் பாலராமவர்ம மகாராஜா காலத்து நாணயங்கள் அவை என்பது தெரியவந்தது. அந்த நாணயங்களை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான சன்மானமாக ஒரு குறிப்பிட்ட தொகை ரெத்தினாகரனுக்கு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்