சபரிமலை சன்னிதானத்தில் செல்போனில் படம் எடுக்க தடை - பக்தர்களுக்கு ‘திடீர்’ கட்டுப்பாடு

சபரிமலை சன்னிதான பகுதியில் செல்போனில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-04 21:19 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த சமயத்தில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், ஏதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

மேலும் கோவிலுக்கு பயங்கரவாத மிரட்டலும் அவ்வப்போது வருவது உண்டு. அப்போது கோவில் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்படும்.

இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படம், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், சபரிமலை கோவில் சன்னிதானம் பகுதியில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் 18-ம் படிக்கு மேல் பகுதிகளில் செல்போனில் படம் எடுப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தநிலையில், சன்னிதான பகுதியில் செல்போனில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, செல்போன் மூலம் சன்னிதான பகுதியில் படம் எடுக்க அனுமதி கிடையாது என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்