கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை, அந்த கடன்களை திருப்பிச் செலுத்துமாறு பலவந்த நடவடிக்கை கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2019-12-09 22:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-2017 கல்வி ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 ஆண்டுகளில், நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் தொகை ரூ.67 ஆயிரத்து 685 கோடியே 59 லட்சத்தில் இருந்து ரூ.75 ஆயிரத்து 450 கோடியே 68 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, பொதுத்துறை வங்கிகள் அளித்த புள்ளிவிவரப்படி, கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும்.

இவற்றில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட கணக்குகள், நிலையானவை ஆகும்.

கல்விக்கடன்களை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் அளித்த நிர்ப்பந்தத்தால், எந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை. கல்விக்கடன்களை திரும்ப வசூலிக்க பலவந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அதே சமயத்தில், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.

வங்கிகள் அளித்த கல்விக்கடன்களையும், கிடைத்த வேலைவாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய புள்ளிவிவரம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்