உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டில் திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-12-11 07:57 GMT
புதுடெல்லி

பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி  சுப்ரீம் கோர்ட்டில் திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, தொல் திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகள்  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.

இதேபோன்று வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி கரூரை சேர்ந்த வாக்காளர் முருகேசன் சுப்ரீம் கோர்ட்டில்  நேற்று மனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வந்தது.

காங்கிரஸ் தரப்பில் வாதாடிய ப.சிதம்பரம் கூறியதாவது:-

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் மாவட்ட ஊராட்சி தலைவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யப்படாததால், உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையை கூட மாநில தேர்தல் ஆணையத்தால் கூற முடியவில்லை என வாதாடினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தப்போவதில்லை என  தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2011 மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு தேர்தலை நடத்தினால் உங்களுக்கு சம்மதமா? என திமுக தரப்பிடம் தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார்.

உள்ளாட்சி தேர்தலை  2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி நடத்த வேண்டும் . ஊராட்சி  பதவி உள்பட அனைத்து பதவிகளுக்கும்   2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும்  என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.  திமுக தரப்பு கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்