குடியுரிமை மசோதா: வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் - பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

குடியுரிமை மசோதா, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2019-12-11 09:45 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வரலாற்று சிறப்புமிக்கது. 370-வது பிரிவு ரத்து போலவே சிறப்பானது. இந்த மசோதா, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

அண்டை நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு வந்தவர்கள் நிச்சயமற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வரும்போது அவர்கள் நிம்மதி அடைவார்கள்.

அவர்கள் அனுபவித்த மத துன்புறுத்தல்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் ஸ்திரமற்ற வாழ்க்கைக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும்.

இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றன. சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பாகிஸ்தானின் குரலிலேயே பேசி வருகின்றன.

ஆகவே, குடியுரிமை மசோதாவை நிறைவேற்றுவதுடன் உங்கள் பணி முடிந்துவிடக்கூடாது. இதில் உள்ள சிறப்புகளை விளக்கிச் சொல்ல வேண்டும்.

மேலும், பட்ஜெட் தொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள், ஏழைகள், தொழிலதிபர்கள் உள்பட பலதரப்பினரையும் சந்தித்து அவர்களது கருத்துகளை திரட்ட வேண்டும். அந்த கருத்துகளை மத்திய நிதி மந்திரியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடி, பா.ஜனதா எம்.பிக் களை எழுந்து நின்று கைதட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்