இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்யலாம் எனத் தகவல்

அசாமில் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2019-12-13 05:47 GMT
டோக்கியோ, 

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 15,16 ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் பிரதமர் மோடி மற்றும் ஷின்சோ அபே ஆகிய இருவரும் சந்தித்து பேச திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசாமில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பிரயோகப்படுத்தினர். இதில், போராட்டக்காரர்களில் 3 பேர் பலியாகினர்.  இணையதள சேவையும் அசாம், மேகாலயாவில் முடக்கப்பட்டுள்ளது. 

கடந்த  இரு தினங்களாக அசாமில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் தனது இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும்,  இது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்