கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

வரதட்சணையாக கார் வேண்டும் என மணமகன் அளித்த அதிர்ச்சிக்கு பதிலடியாக திருமணமே வேண்டாம் என மணமகள் கூறி வரன் வீட்டாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

Update: 2019-12-14 09:48 GMT
முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள சிசோலி கிராமத்தில் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  மணமகன் விவேக் டெல்லியின் நங்லோய் பகுதியை சேர்ந்தவர்.  இரு வீட்டாரும் திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், திருமணம் நடைபெறுவதற்கு சற்றுமுன் மணமகள், எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி மறுப்பு தெரிவித்து உள்ளார்.  இதனால் மணமகன் வீட்டார் மற்றும் திரளாக கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமணம் செய்வதற்கு வரதட்சணையாக கார் கொடுக்க வேண்டும் என மணமகன் வற்புறுத்தியுள்ளார்.  இதனை அறிந்து வெறுப்படைந்த மணமகள் திருமணம் நடைபெறுவதற்கு சற்று முன் இந்த மணமகன் வேண்டாம் என தனது முடிவில் உறுதியாக இருந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனை தொடர்ந்து வரதட்சணை தடுப்பு சட்டத்தின்படி மணமகன் விவேக் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  திருமண நிகழ்ச்சிக்காக பெண் வீட்டார் செலவிட்ட தொகையை அளித்த பின்னரே மணமகனை போலீசார் விடுவித்தனர்.

இதன்பின்பு மணமகன் வீட்டார் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.  வரதட்சணையாக கார் வேண்டும் என கேட்டதற்காக மணமகள் திருமணமே வேண்டாம் என கூறி அதனை நிறுத்தியது அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்