குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மன்மோகன் சிங் -பரபரப்பு வீடியோ

சிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் அரசு தாராள அணுகுமுறையை கையாள வேண்டும் என்று மன்மோகன்சிங் பேசிய 2003-ம் ஆண்டு வீடியோவை வெளியிட்டு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2019-12-19 12:07 GMT
புதுடெல்லி,

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2003-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங், அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில்,  மன்மோகன் சிங் பேசியிருப்பதாவது; - “அகதிகளை கையாள்வது குறித்து சிலவற்றை நான் பேச விரும்புகிறேன். பிரிவினைக்கு பிறகு வங்காளதேசம் போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.  சூழ்நிலைகள் மக்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் போது,  துரதிருஷ்டவசமாக  இந்த மக்கள் நமது நாட்டில் அடைக்கலம் கோருகிறார்கள். எனவே, இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தாராள அணுகுமுறையை அரசு கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது அப்போது எதிர்க்கட்சி  தலைவராக இருந்த மன்மோகன் சிங், மாநிலங்களவையில் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றி வரும் நிலையில், பாஜக இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பதிலடியை கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்