தேஜஸ் ரெயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு; ரூ.1 லட்சம் அபராதம்

தேஜஸ் ரெயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு வழங்கியதாக ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-13 16:47 GMT
மும்பை,

கோவாவில் இருந்து மும்பைக்குச் சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதாக ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

இந்திய ரெயில்வே முதலில் அறிமுகம் செய்த, முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக தொடர் வண்டி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகும். இருக்கை வசதிகள் மட்டும் கொண்ட, நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸின் கதவுகள் தானியங்கும் வசதி கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கி.மீ ஆகும்.

மேலும், இந்த ரெயிலில் செல்போன் சாா்ஜா் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்.இ.டி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள்  இடம் பெற்றுள்ளன. டெல்லி - லக்னோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை மத்திய அரசு, ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைத்தது. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நாட்டின் முதல் ரெயில் இதுவாகும்.

இந்த நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கியதாக ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 11-ம் தேதி கோவாவில் இருந்து மும்பைக்குச் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. ரெயில் மராட்டியத்தில் உள்ள சிப்லூன் ரெயில் நிலையத்தைத் தாண்டிய பின்னர் ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவான சப்பாத்தி மற்றும் புலாவில் கெட்ட வாடை வீசியதாகவும், அவற்றை சாப்பிட்ட பயணிகளில் பலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் தங்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் மறுத்தது. இதுகுறித்து இந் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், “உணவு சூடாக இருக்கும்போது பேக்கிங் செய்யப்பட்டதால்  துர்நாற்றம் வீசியது உண்மைதான். ஆனால் பயணிகள் வாந்தியெடுத்தது மற்றும் மருத்துவ உதவி கேட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை” என்றனர். இதையடுத்து பயணிகளுக்கு கெட்டுப்போன உணவை வழங்கிய ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மும்பை-அகமதாபாத் சதாப்தி ரெயிலில் இதே போன்று கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், பயணிகள் வாந்தி எடுத்ததாக கூறப்படுவதை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்திருப்பது, குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்