கேரளாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக நீளமான கேக்: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது

கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீண்ட கேக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

Update: 2020-01-18 21:23 GMT
திருவனந்தபுரம்,

உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகம் கின்னஸ் ஆகும். ஓவியம், நடனம், விளையாட்டு, சாகசம் போன்ற பல்வேறு துறைகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீளமான கேக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

கேரளா பேக்கரிகள் சங்கம் சார்பில் திருச்சூர் நகரில் நடந்த விழாவில் இந்த கேக் செய்யப்பட்டது. சுமார் 1,500 பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சமையல்காரர்கள், 12,000 கிலோ சர்க்கரை மற்றும் மாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 4 மணிநேரம் செலவழித்து இதை தயாரித்தனர்.

10 சென்டிமீட்டர் அகலமும், தடிமனும் கொண்ட இந்த வென்னிலா கேக், சுமார் 27,000 கிலோ எடை கொண்டது. இதுகுறித்து கேரளா பேக்கரி சங்கத்தின் செயலர் கூறுகையில், 6½ கிலோ மீட்டர் நீளமுடைய இந்த கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது. அதன் நீளத்தை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, சீனா நாட்டின் சிக்சி கவுண்டி பேக்கரி உரிமையாளர்கள் இணைந்து 3.2 கிலோ மீட்டர் நீளமுடைய பழ கேக்கை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்