முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2020-01-23 23:15 GMT
புதுடெல்லி,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சில கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி, ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-

ஒருவரது கைது நடவடிக்கை, சட்டபூர்வமானதா என்பதை தீர்மானிப்பதற்காக, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) பயன்படுத்தப்படுகிறது. சட்ட அனுமதி இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படும்போதுதான் அதை பயன்படுத்த வேண்டும். ஒருவரது தனிப்பட்ட உரிமை பறிக்கப்படும்போது அவருக்கு நிவாரணமாக இந்த மனு அமைகிறது.

ஆனால், சட்டப்படி, கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது. அத்தகைய மனுக்களை கோர்ட்டுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஒருவர் சட்ட அனுமதியின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்த பின்னரே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டுகள் உத்தரவிட வேண்டும்.

ஒருவர் சிறையில் கொடுமைகளை சந்திக்கும்போது, ஆட்கொணர்வு மனுவுடன் கோர்ட்டை அணுகலாம். அவரது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, அவரது மனு விசாரணைக்கு உகந்ததுதான்.

இவ்வழக்கின் மனுதாரர்கள், கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. அவர்கள் தண்டனை குறைப்புக்கு தகுதியானவர்களா என்பதை கோர்ட்டு முடிவு செய்ய முடியாது. அது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால், அரசியல் சட்டத்தை மீறும்வகையில் அந்த விதிமுறை இருக்கக்கூடாது.

எனவே, அரசாணை போட்டு இவர்களை விடுதலை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அவர்களது மனுக்களை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடுவதை மட்டுமே கோர்ட்டு செய்ய முடியும். ஆகவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்