டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பிரசாரம் செய்ய 2 நாள் தடை - தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

டெல்லி சட்டசபை தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் பிரசாரம் செய்ய 2 நாள் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-01-25 20:18 GMT
புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அங்குள்ள மாதிரி நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கப்பட்டு உள்ள கபில் சர்மா, கடந்த 22-ந்தேதி தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அதில் டெல்லியில் அதிக எண்ணிக்கையில் சிறிய சிறிய பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், வருகிற 8-ந்தேதி டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல்தான் நடப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

கபில் சர்மாவின் இந்த கருத்து மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதற்கு அவர் அனுப்பிய பதிலில் தேர்தல் கமிஷன் திருப்தியடையவில்லை.

இதைத்தொடர்ந்து கபில் சர்மா டெல்லியில் நேற்று மாலை 5 மணி முதல் 48 மணி நேரரத்துக்கு (2 நாட்கள்) பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்