குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை!

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Update: 2020-01-26 06:56 GMT
புதுடெல்லி,

இன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் அய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் செய்திகள்