கொரோனா வைரஸ் எதிரொலி: உகான் நகரில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு முடிவு

கொரோனா வைரஸ் எதிரொலியாக, உகான் நகரில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-01-27 21:54 GMT
புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியாக விளங்குவது ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகர் ஆகும். நாடு முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நகரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நகரத்தில் ஏராளமான இந்தியர்களும் வசித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி மந்திரி சபை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நேற்றும் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.

இதில் உகான் நகரில் வசிக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக சீன அதிகாரிகளை மத்திய வெளியுறவுத்துறை மூலம் தொடர்பு கொண்டு இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதைப்போல சீனாவில் இருந்து கப்பல் போக்குவரத்து நடைபெறும் இந்திய துறைமுகங்களில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்