"டெல்லி தேர்தலுக்கு முன் பேச வேண்டிய 3 விஷயங்கள்" -மோடிக்கு ப.சிதம்பரத்தின் ஆலோசனை

பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மூன்று விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2020-01-29 07:47 GMT
புதுடெல்லி,

டெல்லியில் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது மூன்று விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

“பிரதமரும் அவரது மந்திரிகளும் யதார்த்த உலகில் இருந்து விலகிவிட்டது போல் தோன்றுகிறது. பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது மூன்று விஷயங்கள் குறித்து மக்களிடம் பேசலாம்.

முதலாவதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு 2 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் 2019 டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இரண்டாவதாக வரி வருவாய் 2019-20 ஆம் ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டிலிருந்து ரூ.2.5 லட்சம் கோடி குறையும்.

மூன்றாவதாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் குறைவு ஏற்படும்.

இந்த மூன்று விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி மக்களிடம் பேச வேண்டும். மேலும் மோடி குறிப்பிட்ட ‘அச்சே தின்’(நல்ல நாள்) 6 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் ஏன் வரவில்லை என்பதையும் அவர் விளக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
 

மேலும் செய்திகள்