கேரளாவில் 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 105 வயது மூதாட்டி

மாநில எழுத்தறிவு இயக்க இயக்குனர் ஸ்ரீகலா, பகீரதி அம்மாவின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார்.

Update: 2020-02-05 21:40 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். வயது முதுமை காரணமாக தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்ட பகீரதி அம்மா, சூழ்நிலையியல், கணிதம் மற்றும் மலையாளம் ஆகிய 3 பாட தேர்வு எழுதுவதற்கு 3 நாட்களை எடுத்துக்கொண்டதாக எழுத்தறிவு இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு சிரமப்பட்டு எழுதியும், மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு, 205 மதிப்பெண் பெற்று அவர் சாதித்து உள்ளார். இதில் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றது கூடுதல் சிறப்பாகும். தேர்வில் வெற்றி பெற்ற பகீரதி அம்மா கேரளாவின் வயதான 4-ம் வகுப்பு மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாநில எழுத்தறிவு இயக்க இயக்குனர் ஸ்ரீகலா, பகீரதி அம்மாவின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். மூதாட்டி பகீரதி அம்மாவுக்கு 5 பிள்ளைகளும், 12 பேரக்குழந்தைகளும் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்