பொது பாதுகாப்பு சட்டம் ஜனநாயகத்தில் மிக மோசமானது அருவருப்பானது- ப.சிதம்பரம்

உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

Update: 2020-02-07 05:25 GMT
புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா  பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. இந்த தகவலை மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  கடும் கண்டன தெரிவித்து டிவிட் செய்து உள்ளார்.

"உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பிறருக்கு எதிராக பொது பாதுகாப்புச் சட்டம் அதிர்ச்சியையும் பேரழிவையும்  ஏற்படுத்தும்.  குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்படுவது என்பது  ஜனநாயகத்தில் மிக மோசமானது அருவருப்பானது.

அநியாய சட்டங்கள் இயற்றப்படும்போது அல்லது அநியாய சட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, ​​அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதை விட மக்களுக்கு என்ன வழி இருக்கிறது? என கூறி உள்ளார்.



பொது பாதுகாப்புச் சட்டம்  என்பது மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக’ ஒரு நபர் நடந்துகொண்டால் அவரை இரண்டு வருடங்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது. ஒரு நபர் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்துகொள்வார் எனக் கருதினால் இந்தச் சட்டத்தின்படி ஓராண்டு அவரை சிறையில் வைத்திருக்க முடியும். எதற்காக கைது செய்கிறோம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித அறிக்கையும் தரத் தேவையில்லை என கூறுகிறது.

2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கிடையே பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 2,400 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 58 சதவீத  வழக்குகள் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்