டெல்லி சட்டசபை தேர்தல்; 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவு

டெல்லி சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2020-02-08 12:14 GMT
புதுடெல்லி,

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து  ஜனநாயக கடமையாற்றினார்.  இதேபோன்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

லோதி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது வாக்கை பதிவு செய்தார்.  டெல்லியில் காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.

இதன்பின் காலை 11 மணி நிலவரப்படி 6.96 சதவீத வாக்குகளும், 12 மணி நிலவரப்படி 15.68 சதவீத வாக்குகளும் பதிவாகின.  கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மந்தகதியில் வாக்கு பதிவு நடந்து வந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 19.37% வாக்குகள் பதிவாகியிருந்தன.  இதன்பின் மதியம் 2 மணியளவில் 28.14 சதவீத வாக்குகள் பதிவாகின.

டெல்லி சட்டசபை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 30.18 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  தொடர்ந்து நடந்த வாக்கு பதிவில் விறுவிறுப்பு கூடியது.  இதனால் 4 மணி நிலவரப்படி 42.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.  5 மணி வரை 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு தொகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர்களின் மகன் ரைஹான் ராஜீவ் வதேரா ஆகியோர் இன்று வாக்களித்தனர்.  இதில் ரைஹான் முதன்முறையாக தனது வாக்கினை செலுத்தினார்.  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வாக்களித்து சென்றார்.  இதேபோன்று சஞ்சார் பவன் பகுதியில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் காரத் வாக்களித்து உள்ளார்.

மேலும் செய்திகள்