டெல்லி முதல் மந்திரியாக வரும் 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.

Update: 2020-02-12 05:55 GMT
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ந்தேதி நடைபெற்றது.  டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.  ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.  இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன.  காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.  தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.

இதற்கான பதவியேற்பு விழா வருகிற 16ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.

மேலும் செய்திகள்