உமர் அப்துல்லா கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்

உமர் அப்துல்லா கைதுக்கு எதிரான வழக்கின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எம்.சந்தானகவுடர் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்தார்.

Update: 2020-02-12 23:30 GMT
புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி உமர்அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனை எதிர்த்து அவருடைய சகோதரி சாரா அப்துல்லா பைலட் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் ‘உமர் அப்துல்லாவின் கைது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, நீதிபதிகள் எம்.சந்தானகவுடர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் இந்த அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எம்.சந்தானகவுடர் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தாம் விலகி கொள்வதாக தெரிவித்தார். ஆனால் விலகலுக்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை.

இதனையடுத்து இந்த வழக்கை மற்றொரு அமர்வு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்