மத்திய அரசு பிற்போக்கு சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும் : சிவசேனா விமர்சனம்

மத்திய அரசு பிற்போக்கு சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

Update: 2020-02-19 07:52 GMT
File Photo
மும்பை,

ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் (எஸ்.எஸ்.சி. கமிஷன்) தேர்வு செய்யப்பட்டு பெண் அதிகாரிகளாக இருப்பவர்கள் 10 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க முடியும். மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க விதிமுறை உள்ளது. இந்தநிலையில், ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படுவது இல்லை என்றும், ஆண் அதிகாரிகளைப் போல் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரி, 1993-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்த 332 பெண்கள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆண் அதிகாரிகளைப் போல் பெண் அதிகாரிகளையும், ஓய்வு பெறும் வயது (60 வயது) வரை பணி புரிய அனுமதிக்கும் வகையில் (பெர்மனென்ட் கமிஷன்) தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.

வழக்கு விசாரணையின் போது, ராணுவத்தில் கட்டளை பிறப்பிக்கும் பணியில் பெண் அதிகாரிகளை நியமிப்பதில் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சில பிரச்சினைகள், தடைகள் இருப்பதாக மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டது. அதாவது ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள் என்றும், பெண்களின் தலைமையை சில ஆண்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், மேலும் பெண்களுக்கு குடும்ப பொறுப்பு, பிரசவ கால விடுப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன என்றும் வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இந்திய அரசிலமைப்பு சட்டத்தின்படி ஆண்-பெண் பாகுபாடு இன்றி அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றும், எனவே ராணுவத்தில் உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். வாதங்கள் நிறைவுக்கு பின்னர், இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,  “ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும். 3 மாதங்களுக்குள் ராணுவத்தில் தகுதியான பெண்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்

ராணுவத்தில் பெண்களுக்கு   உயர் பதவி வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சிவசேனா வரவேற்றுள்ளது. அதேவேளையில்,  மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள சிவசேனா,  “ ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் வரக் கூடாது. அது எதிரி நாட்டிற்கு சாதகமாக அமைந்து விடும் என்ற மத்திய அரசிற்கு,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கும். பெண்களால் கடினமாக பணிகளை செய்ய முடியும் என்பதில் சந்தேகம் எழுப்புவது தான் முற்போக்கு பற்றி பேசும் அரசின் உண்மையான நிலைப்பாடு.

அரசு பிற்போக்கு பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். 1971 -ல் பிரதமர் இந்திரா தலைமையிலான அரசால் தான் இந்தோ-பாக்.போரில் நாம் வெற்றி அடைய முடிந்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய கருத்துக்கள் அவர்களின் பிற்போக்கு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.  அரசுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.  ஒரு நாள்,  ராணுவ படைகளுக்கும் பெண்கள்  தலைமை ஏற்பார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்