உத்தரபிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு: வெட்டி எடுக்க இ-டெண்டர் மூலம் ஏலம்

3 ஆயிரம் டன் தங்கம் எடுக்கக்கூடிய தங்க சுரங்கம் உத்தரபிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெட்டி எடுப்பதற்காக இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.

Update: 2020-02-21 22:30 GMT
லக்னோ,

சீனாவில் கொரோனா வைரஸ் ஆதிக்கத்தின் காரணமாக முக்கிய தொழில்கள் முடங்கி, பங்குச்சந்தை சரிந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய உச்சங்களை தொடத்தொடங்கி உள்ளது.

இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய பரபரப்பு தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

அது உத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் 3 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுக்கிற வாய்ப்புகளை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான்.

இந்த சுரங்கங்களில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனமும், உத்தரபிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகமும் உறுதி செய்துள்ளன.

தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் வெட்டி எடுப்பதற்காக வயல்களை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கையில் உத்தரபிரதேச மாநில அரசு இறங்கி உள்ளது.

இந்த தங்க சுரங்க ஒதுக்கீடு, இணையதளம் வாயிலான இ-டெண்டர் ஏலம் மூலம் நடைபெறும். இதற்காக 7 உறுப்பினர்களை கொண்ட குழுவை அந்த மாநில அரசு அமைத்து இருக்கிறது.

இதையொட்டிய அறிக்கையை இந்த 7 உறுப்பினர்கள் குழு மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகத்திடம் இன்று (சனிக்கிழமை) சமர்ப்பிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோன்பகதி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் மட்டுமே 2,943.26 டன் தங்கம் இருப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹார்தி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் 646.15 கிலோ தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

நமது நாட்டில் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் தங்க இருப்பு 626 டன் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இதே போன்று 5 மடங்கு தங்க இருப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் உள்ளது.

இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இது உத்தரபிரதேச மாநில அரசுக்கு பெருத்த வருவாயை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்