ரூ.8 லட்சம் கோடி கடன்களை பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

வங்கிகளில் மிகப்பெரும் தொழில் அதிபர்கள் வாங்கிய ரூ.8 லட்சம் கோடி கடன்களை மத்திய பாரதீய ஜனதா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது என காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

Update: 2020-02-22 23:15 GMT
புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வராக்கடன்களின் அளவு 11.7 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக குறைந்து விட்டது என்று மத்திய அரசு உங்களுக்கு சொல்லும். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருந்திருக்க வேண்டும். பொருளாதாரம் மேம்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை வேறு.

வங்கிகள் உண்மையில் மிகப்பெரும் முதலாளிகளின் கடன் களை தள்ளுபடி செய்கின்றன.

மொத்த கடன்களில் 16 சதவீதம் சிக்கலில் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் கோடி ஆகும். இது கடந்த டிசம்பர் மாத நிலவரம். 2017-ம் ஆண்டு இது 12 சதவீதம் ஆகும்.

இது இந்திய பொருளாதாரத்தின் கடுமையான மந்த நிலையின் தெளிவான அறிகுறி.

எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்படுகிற சில பொருளாதார பிரச்சினைகள், மத்திய அரசை அதன் தூக்கத்தில் இருந்து உலுக்கும். அப்படி இருந்தாலும்கூட, அரசு அதை மறுக்கும்.

வங்கி பிரச்சினைதான் இந்தியாவை மிக மோசமாக பாதித்துள்ளது.

வங்கி பிரச்சினைகளில் தீர்வு காணப்படும் வரை இந்தியாவின் பொருளாதார அவல நிலையை தீர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லை. இப்போது அப்படி ஒரு நிலைதான் உள்ளது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் புதிது புதிதாக வராக்கடன்கள் சேருகின்றன. இதில் தொலைதொடர்பு துறை, ரியல் எஸ்டேட், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிக நோக்கு வாகனங்கள் துறை அடங்கும்.

பாரதீய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ.8 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கடன்கள் பெரும் தொழில் அதிபர்கள் வாங்கியவை.

இந்த நாட்டில் ஒவ்வொருவரும் வரி செலுத்துபவர்தான். ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், யாருடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடப்படவில்லை. ஏன் இந்த அந்தரங்கம்?

யாருடைய கடன்களையெல்லாம் தள்ளுபடி செய்திருக்கிறார்களோ அவர்களின் பெயர்களையெல்லாம் பகிரங் கமாக அறிவிக்க வேண்டும்.

வங்கித்துறை பற்றி பாரதீய ஜனதா அரசிடம் கேள்வி எழுப்புகிறபோதெல்லாம், அவர்கள் முந்தைய அரசு பற்றியே குற்றம்சாட்டுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் பொய் சொல்வதின் மூலம் உண்மையை மாற்ற முடியாது. கடந்த 6 ஆண்டுகளில் வங்கித்துறை சீர்திருத்தத்துக்கு பாரதீய ஜனதா அரசு என்ன செய்திருக்கிறது?

கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதற்கான செயல்முறை களை ஆராய உயர் மட்ட குழு அமைக்க வேண்டும். இந்த குழு வங்கித்துறையின் நிதி நம்பகத்தன்மை மற்றும் திறனையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்