டிரம்ப் வருகை நிகழ்ச்சி நிரல்; அகமதாபாத் காவல் ஆணையாளர் பேட்டி

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் நிகழ்ச்சி நிரல் பற்றி அகமதாபாத் காவல் ஆணையாளர் பேட்டி அளித்து உள்ளார்.

Update: 2020-02-23 12:36 GMT
அகமதாபாத்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  தொடர்ந்து இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.

அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து நேராக அகமதாபாத் நகருக்கு வரும் டிரம்ப் அங்குள்ள, மோதேரா மைதானத்தில் நடைபெறும் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  இதில் 1 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

டிரம்ப் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  இதுபற்றி அகமதாபாத் நகர கமிஷனர் ஆஷிஷ் பாட்டியா கூறும்பொழுது, பாதுகாப்பிற்காக 33 துணை கமிஷனர்கள், 75 உதவி கமிஷனர்கள், 300 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1,000 சப்-இன்ஸ்பெக்டர்கள், 12 ஆயிரம் வீரர்கள் மற்றும் 2 ஆயிரம் மகளிர் போலீசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்றிரவு நடந்த சோதனையில் சிலரை கைது செய்து உள்ளோம்.  ஆனால் எத்தனை பேர் என்ற தகவலை வெளியிட முடியாது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் காலை 11.30 மணியளவில் அகமதாபாத் நகருக்கு வருகை தருகிறார்.  இதன்பின் விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  12 மணியளவில் இசை கச்சேரிகள் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலம் நடைபெறும்.  அவர் மோதேரா ஸ்டேடியம் செல்லும் வழியில் சபர்மதி ஆசிரமத்திற்கும் செல்கிறார்.  இதன்பின்னர் பிற்பகல் 3 மணியளவில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நிறைவு பெறும்.  அதிபர் டிரம்ப் பிற்பகல் 3.30 மணியளவில் ஆக்ராவுக்கு புறப்பட்டு செல்வார் என பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்