மோசடி வழக்கு; சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆசம் கான், மனைவி, மகனுக்கு சிறை தண்டனை

மோசடி வழக்கொன்றில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகன் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-26 12:13 GMT
ராம்பூர்,

சமாஜ்வாடி கட்சியின் ராம்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் முகமது ஆசம் கான்.  இவரது மனைவி தன்ஜீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா ஆசம்.  கான் மீது நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, புத்தகம், மின்சாரம், சிலை, எருமை மற்றும் ஆடு ஆகியவற்றை கொள்ளையடித்தது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவரது மகன் அப்துல்லா ஆசம் மீது பிறந்த தின ஆவணங்களில் மோசடி செய்துள்ளார் என வழக்கு பதிவானது.  மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட பின்னர் சட்டசபை உறுப்பினர் பதவியையும் அவர் இழந்து விட்டார்.

கடந்த வருடம் ஜூலையில் ஆசம் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 4க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.  இதனால் நேரில் ஆஜராகும்படி ராம்பூரில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை.  முன்ஜாமீன் கோரிய அவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.  நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், வழக்குகளில் ஒன்றில் கான் உள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.  பின்னர் அவர்களின் சொத்துகளை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் கான் மற்றும் அவரது மனைவி, மகன் இன்று சரண் அடைந்தனர்.  அவர்களுக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.  இதனை அடுத்து எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகன் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.  இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் மார்ச் 2ந்தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்