டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றத்தால் சர்ச்சை பா.ஜனதா தலைவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் கண்டனம்

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-27 23:15 GMT
புதுடெல்லி,

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வெறுப்புணர்வை தூண்டும்வகையில் பேசியதாக கூறப்படும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று அவர்கள் கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே நாள் மாலையில், நீதிபதி முரளிதர் பணியிட மாற்ற உத்தரவு வெளியானது. அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்திருப்பதாக மத்திய சட்ட அமைச்சகத்தின் அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருந்தது.

சர்ச்சை

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “இந்த நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்படாத துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவு கூர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா தலைவராக இருந்த அமித்ஷா மீதான சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி நாக்பூரில் மாரடைப்பால் காலமானார். அதை நினைவுகூர்ந்து, ராகுல் காந்தி இக்கருத்தை தெரிவித்தார்.

பிரியங்கா

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த அரசை பார்க்கும்போது, நள்ளிரவில் நடந்த நீதிபதி பணியிட மாற்றம் அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், இது உண்மையிலேயே வெட்கக்கேடானது.

கோடிக்கணக்கான மக்கள் நேர்மையான நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தநிலையில், நீதித்துறையை நசுக்கி, மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் மத்திய அரசின் முயற்சிகள் கண்டனத்துக்குரியவை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காப்பாற்ற முயற்சி

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “இந்த இடமாற்றம், பா.ஜனதா அரசின் மோதி விட்டு தப்பும் அநீதிக்கு ஒரு உதாரணம். அவர்களின் பழிவாங்கும் அரசியல் அம்பலமாகி விட்டது. கலவர வழக்கில் சிக்கிய பா.ஜனதா தலைவர்களை காப்பாற்றவே நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதி வழங்குபவர்களும் தப்ப முடியாது என்பதையே இது காட்டுகிறது” என்று கூறினார்.

மத்திய அரசு மறுப்பு

இதற்கிடையே, காங்கிரசின் குற்றச்சாட்டுகளை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிராகரித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நீதிபதி முரளிதர் இடமாற்றம், நன்கு ஸ்தாபிக்கப்பட்ட நடைமுறைப்படியே நடந்துள்ளது. அவரை இடமாற்றம் செய்ய கடந்த 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்தது. நீதிபதியின் சம்மதமும் பெறப்பட்டுள்ளது.

வழக்கமான இடமாற்றத்தைக்கூட அரசியல் ஆக்குவதன் மூலம், நீதித்துறை மீது மரியாதை இல்லாததை காங்கிரஸ் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்திய மக்கள், காங்கிரசை நிராகரித்து விட்டனர். எனவே, இந்தியா பெருமைப்படத்தக்க அமைப்புகள் மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது.

நீதிபதி லோயா வழக்கு, சுப்ரீம் கோர்ட்டால் தீர்வு காணப்பட்டுள்ளது. கேள்வி எழுப்புபவர்கள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிப்பதில்லை போலும். ராகுல் காந்தி, தன்னை சுப்ரீம் கோர்ட்டை விட மேலானவராக கருதுகிறாரா?

குடும்பத்தின் சொத்து

எங்கள் அரசு, நீதித்துறை சுதந்திரத்தை மதிக்கிறது. காங்கிரஸ்தான், அவசரநிலை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை கூட அவமதித்தது. தங்களுக்கு விருப்பமான தீர்ப்பாக இருந்தால், மகிழ்ச்சி அடைவதும், எதிரானதாக இருந்தால், அந்த அமைப்புகள் மீது பாய்வதுமாக உள்ளது.

ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சேபகரமான பேச்சுகள் பற்றி உபதேசிக்க உரிமை இல்லை. அந்த குடும்பமும், அவர்களின் ஆதரவாளர்களும் கோர்ட்டு, ராணுவம், தணிக்கை குழு, பிரதமர் என அனைவரை பற்றியும் கடுமையான வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்