மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-03-01 07:52 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் அம்லோரி என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கிருந்து உத்தரபிரதேசத்துக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்காக தனி ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சரக்கு ரெயில் பாதையை தேசிய அனல் மின் கழகம் நிர்வகித்து வருகிறது.

அம்லோரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் உத்தரபிரதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மத்தியபிரதேசத்தின் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள கன்காரி என்ற கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை 4.40 மணி அளவில் சென்ற போது, அந்த சரக்கு ரெயிலும், காலியாக வந்த மற்றொரு சரக்கு ரெயிலும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஒரு சரக்கு ரெயிலின் 13 பெட்டிகள் (வேகன்கள்) தடம்புரண்டு கவிழ்ந்தன. மேலும் ஒரு ரெயிலின் என்ஜினும் தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 3 பேர் பலி ஆனார்கள். அவர்களில் இருவர் என்ஜின் டிரைவர்களாகவும், ஒருவர் ஊழியராகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகளும், மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.டிரைவர்களின் கவனக்குறைவு காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாகவோ இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக சிங்க்ராலி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஷிண்டே தெரிவித்தார்.

நிலக்கரி கொண்டு செல்வதற்கான தனி பாதையில் இந்த விபத்து நடந்ததால், அந்த பகுதியில் பயணிகள் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்