டெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

டெல்லி வன்முறைக்கு பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2020-03-02 09:22 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  தொடர்ந்து 3 நாட்களாக நடந்த இந்த வன்முறையில், தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது.  மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனைகளில் மரணமடைந்துள்ளனர்.  இந்நிலையில், டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்து உள்ளது.  குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் 38 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 3 பேரும், ஜக் பர்வேஷ் சந்தர் மருத்துவமனையில் ஒருவரும் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேரும் என 47 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்