திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடி தரிசனத்துக்கு ஏற்பாடு: தேவஸ்தான அதிகாரி தகவல்

கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையானை நேரடியாக தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்தார்.

Update: 2020-03-15 21:45 GMT
நகரி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது.

கொரோனா வைரசில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பல முடிவுகளை எடுத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 17-ந் தேதி முதல் டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற்ற பக்தர்கள் அனைவரும் வைகுண்டம் கியூ காம்பிளக்ஸ் ஒன்று மற்றும் இரண்டில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பக்தர்களின் வசதிக்காக திருமலை மற்றும் திருப்பதியில் டோக்கன்கள் வழங்க கவுண்டர்கள் திறக்க இருக்கிறோம்.

பக்தர்கள் ஒரே இடத்தில் கும்பலாக காத்திருப்பதை தவிர்க்க விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த சேவைகளுக்காக டிக்கெட் வாங்கிய பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தை அணுகினால் அவர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வோம்.

பொதுமக்கள் அனைவரும் நலமாக இருக்க ஏழுமலையானின் ஆசீர்வாதம் இருக்க வேண்டுமென கோரி வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருமலையில் உள்ள பார்வேட்ட மண்டபத்தின் அருகே ஸ்ரீநிவாச சாந்தி உற்சவம் மற்றும் தன்வந்திரி மகாயாகம் நடத்தப்படும்.

திருமலையில் உள்ள மருத்துவப்பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் வேலை செய்யும் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்துள்ளோம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக யாத்ரிகர்கள் 0877-2263447 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கடப்பாவில் உள்ள ஒன்டி மிட்டா ஸ்ரீகோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற உள்ள கல்யாண உற்சவம், கோவிலுக்கு உள்ளேயே வைத்து நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்