நாடாளுமன்றத்துக்கு முக கவசம் அணிந்து வந்தார் ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு முக கவசம் அணிந்து வந்தார்.

Update: 2020-03-18 21:21 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் நோய் பீதிக்கு மத்தியிலும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

மாநிலங்களவைக்கு நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் முக கவசம் அணிந்து வந்து சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முக கவசம் அணிந்து வந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் முக கவசம் அணிந்து வந்தனர். ஆனால் அவர்கள் முக கவசத்தை உடனே அகற்றும்படி சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

ஆனால் சபைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ப.சிதம்பரம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது, பாதிக்கப்படக்கூடிய தன்மையைப் பொறுத்து, முக கவசம் பயன்படுத்துவது பற்றி உறுப்பினர்கள் முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதை சபைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் ஏற்றுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய் பரவி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரை குறைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த வைரஸ் நோயை தடுப்பதற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது, பல்வேறு இடங்களில் கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் (சுத்தம் செய்யும் திரவம்) வைக்கப்பட்டுள்ளது என்று சபைத்தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்