கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி ஆலோசனை - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

கொரோனா பரவுவதை தடுக்க அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடு்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறியதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.

Update: 2020-03-21 02:31 GMT
பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற பிறகு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரசிடம் இருந்து நாட்டை எந்த ரீதியில் காப்பாற்ற வேண்டும் என்று ஆலோசனைகளை பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாம் இன்னும் அதிகமாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். கர்நாடகத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நான் அவரிடம் விவரித்தேன். இதை அவர் பாராட்டினார்.

கலபுரகி, உப்பள்ளி, பல்லாரி, மங்களூருவில் கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்த எந்த விதத்தில் உதவி தேவை என்று சொன்னால் அதை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாட்டில் எந்த மாநிலத்திலும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதிக மருந்துகள் தேவைப்பட்டால் அதை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வி மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்