இத்தாலியில் இருந்து இந்தியர்கள் 263 பேர் டெல்லி திரும்பினர்; கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் 263 பேர், கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

Update: 2020-03-22 22:45 GMT
புதுடெல்லி, 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இத்தாலியை நிர்மூலமாக்கி வருகிறது. உலக அளவில் அதிக உயிரிழப்புகள் தினந்தோறும் அந்த நாட்டில் நிகழ்ந்து வருகிறது.

இவ்வாறு பெரும் பீதி நிலவி வரும் இத்தாலியில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இதில் 215 பேர் கடந்த 15-ந்தேதி டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அங்குள்ள சிறப்பு முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 263 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து தென்மேற்கு டெல்லியில் உள்ள இந்தோ-திபெத் படையினரின் கண்காணிப்பு முகாமில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு ஏற்கனவே சீனாவின் உகானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்