கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2020-03-24 19:46 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான எல்லைகள் அடைப்பு, தடை உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் முறைசாரா தொழிலாளர்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 4½ கோடி கட்டிட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பலர் பல்வேறு நகரங்களில் சிக்கித்தவிக்கிறார்கள்.

முழு அடைப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகளால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். கனடா போன்ற பல நாடுகள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்ற நிதி திட்டங் களை அறிவித்துள்ளன. எனவே இந்த அசாதாரணமான சூழ்நிலையில் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் மாநில அரசுகள் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு சம்பளம், நிதியுதவி போன்ற உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் முதல்-மந்திரிகளுக்கும் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் செய்திகள்