கொரோனா பரவுவதை தடுப்பது பற்றி பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை ஆலோசனை

கொரோனா பரவுவதை தடுப்பது பற்றி பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-03-25 23:30 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அறிவித்தார்.

மேலும், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கி இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள அவரது அலுவலக இல்லத்தில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா பரவுவதை தடுக்க ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால், நேற்று மந்திரிசபை கூட்டத்தில் மந்திரிகளுக்கான இருக்கைகள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு போடப்பட்டு இருந்தன.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த இன்னும் என்னென்ன கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்