கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; ஜி 20 தலைவர்கள் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஜி 20 தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

Update: 2020-03-26 04:13 GMT
ரியாத்,

உலகம் முழுவதையும் கொரோனா  வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில்,  ஜி 20 மாநாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில், சார்க் உறுப்பு நாடுகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார்.

இந்த நிலையில், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் இன்று கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்